By Kavinthan Shanmugarajah
கடந்த சில தசாப்தங்களில் உலகம் எதிர்கொண்டுள்ள மிகப் பாரிய அச்சுறுத்தலாக கொரோனாவை அடையாளப்படுத்த முடியும். சிறிய தீவுகள் முதல் பல வல்லரசுகளின் அடித்தளத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது இந்த கொரோனா.
சீனாவில் ஆரம்பமாகி உலக நாடுகள் பலவற்றின் சமூக, பொருளாதார கட்டமைப்பின் மீதும் தாக்கம் செலுத்தியுள்ள, இந்த தொற்று நோயின் மூலங்கள் இன்னும் ஆராயப்பட்டு வரும் நிலையில், இந்த அவசரகால நிலையில் சீனாவின் செயற்பாடுகள் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன.
நோய்த் தொற்று ஆரம்பமாகி பல நாட்கள் கடக்கும் வரை, சீனா இது தொடர்பில் வெளியுலகிற்கு சரியாக அறிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. Closed Regime என வர்ணிக்கப்படும் சீன அரசாங்கத்தின் கெடுபிடி, தணிக்கை, கடும்போக்கு போன்ற பல காரணங்கள், கொரோனா தொடர்பான ஆரம்ப விபரங்கள் வெளியுலகிற்கு தெரியவருவதை தாமப்படுத்தியதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அந்நாட்டில் நிலவும் முக்கிய சமூகவலைதளங்கள் மீதான தடை, அரசாங்கத்தால் தொடர்ந்து கண்காணிப்புக்குள்ளாகும் உள்ளக, வெளியுலகுடனான தொடர்பாடல் என பல சிக்கல்கள் கொரோனா தொடர்பில் உலகை எச்சரிப்பதற்கு தடையாக இருந்தன.
இத்தகவல்கள் உத்தியோகபூர்வமாக வெளியாகும் நேரம், அந்த வைரஸ் தனது கோரத்தாண்டவத்தை ஆரம்பித்திருந்தது.
இந்த சம்பவம், நெருக்கடி நிலையின் போதான தொடர்பாடல் (Crisis Communication) தொடர்பிலான படிப்பினையாக அமைந்துள்ளது.
குறிப்பாக சுகாதரம் தொடர்பான நெருக்கடி நிலையின் போதான தொடர்பாடலில் பல்வேறு அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
இத்தகைய நிலைகளின் போது வெளிப்படைத்தன்மை மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட தொடர்பாடல் அவசியமாகும். எனினும் சீனாவின் செயற்பாடுகள் இதற்கு எதிர்த் திசையிலேயே அமைந்திருந்தன.
நெருக்கடி நிலையின் போதான முன்னேற்பாட்டுக்கான அவசியத்தை இன்று உலகம் நன்கு அறிந்துள்ள போதிலும், அது சற்று காலதாமதமாகவே இடம்பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் உயர் மட்டத்தின் நடவடிக்கைகளுக்கு பயந்த மாகாண மட்ட அதிகாரிகள், நோய்த்தொற்று தொடர்பிலான தகவல்களை மறைத்ததாக கூறப்படுகின்றது. இது தகவல்கள் தொடர்பில் காணப்பட்ட இடைவெளிக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
இத்தகவல் உயர்மட்டத்தை அடைந்த போதிலும், அவர்கள் அவற்றை உரிய நேரத்தில், உரிய முறையில் வெளியுலகிற்கு அறியத்தரவில்லை. இங்கு வெளிப்படைத் தன்மை முழுமையாக கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது.
பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி கண்ட சீனா இவ்விவகாரத்தில் பாரிய தோல்வியையே கண்டுள்ளது.
சரியான தகவலை, உரிய நேரத்தில், அதற்கேற்ற முக்கியத்துவத்துடன் வழங்க சீனா தவறியுள்ளதாக அவதானிகள் குறிப்பிடுகின்றது. அவர்களின் மூடி மறைக்கும் நோக்குடனான செயற்பாடு, இன்று பல உயிர்களை காவு வாங்கி வருகின்றது.
உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள இப்பாரிய சவால் நிலையிலிருந்து நிறுவனங்களும் தங்கள் தொடர்பாடல் தொடர்பில் பல பாடங்களை கற்க முடியும்.
தமது தொடர்பாடல் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவனங்கள் கற்க வேண்டிய பாடங்கள்:
- நிறுவனமொன்றுக்கு அதன் உள்ளக, வெளியக தொடர்பாடல்கள் (Internal/ External) முக்கியத்துவம் பெறுகின்றன. எந்தவொரு நிறுவனமும் அது சார்ந்த அனைவரையும் தொடர்பாடல் வட்டத்துக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.
- எந்த நிறுவனமொன்றிலும் தொடர்பாடலுக்கான மூலபாயமொன்று (Strategy) இருத்தல் அவசியமாகின்றது. இது நெருக்கடி நிலைகளின் போதான செயற்பாட்டை வரையறுத்து, வினைத்திறனாக அச் செயற்பாடு இடம்பெற வழிவகுக்கும்.
- தொடர்பாடலில் வெளிப்படைத்தன்மை (Transparency) அவசியாகும், குறிப்பாக நெருக்கடி நிலைகளில், நிறுவனங்கள் வெளிப்படைத்தன்மையை கடைப்பிடிப்பது அத்தியாவசியமானதாகும். தம்மீதான உண்மைத் தன்மையை சீர்தூக்கி பார்ப்பதானது (Self Analysis) மேலதிக தாக்கங்களை குறைப்பதற்கு (Damage Control) உதவும்.
- காலதாமதம் அழிவுக்கு வழிவகுக்கும் என்பதனை நிறுவனங்கள் சீனாவை பார்த்து உணரவேண்டும். உரிய நேரத்தில்(Timely), உரிய மூலங்கள் (Right Sources) ஊடாக, உரிய தகவல்கள் (Right Information), உரியவர்களை (Right Audience) சென்றடைய வேண்டும்.
- இத்தகைய நெருக்கடி நிலையின் போது தொடர்பாடலை வழிநடத்த ஒரு அணி அவசியமாகும். அது உள்ளக அல்லது வெளியக அணியாக இருக்க முடியும். இவர்கள் நன்கு அனுபவம் வாயந்தவர்களாக, சூழ்நிலை தொடர்பில் அனுமானித்து நிலமையை சுமூகமாக கையாளக்கூடியவர்களாக சிறப்புத் தேர்ச்சி (Expertise) கொண்டவர்களாக இருத்தல் அவசியமாகின்றது. இவர்கள் அனைத்து தரப்பினருடனும் தொடர்பை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும், அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவர்களாகவும் இருத்தல் அவசியமாகும்.
- அதேபோல் தொடர்பாடலில் செய்தியின் தரம் தொடர்பிலும் அக்கறை கொள்வது முக்கியமானதாகும். இக்கட்டான நேரங்களில் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டதாக (Fact Based) அவை அமையவேண்டும். இது மேலதிக குழப்பங்கள், தவறான புரிதல்களை தவிர்க்கும்.
- முறையான தகவல்கள் நிறுவனம் மீதான நம்பிக்கையை காப்பாற்றுவதுடன், அதன் நற்பெயரையும் காப்பாற்றும்.
எனவே வருமுன் காப்போம்……